பி.எப் பணம் வரத் தாமதமாகிறதா.. ஆன்லைனில் காரணத்தைக் கண்டுபிடியுங்க!

பி.எப் பணம் வரத் தாமதமாகிறதா.. ஆன்லைனில் காரணத்தைக் கண்டுபிடியுங்க!

 
இந்தியாவில் நாலரை கோடி Provident Fund எனப்படும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் தனது வைப்பு நிதியைப் பெற விரும்பி விண்ணப்பிக்கும்போது முழு செட்டில்மென்ட்டையும் முடிக்க 5 முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. உண்மையில் ஒரு மாதம்தான் அதிகபட்சம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது. இருப்பினும் 6 மாதங்கள் வரை இழுத்து விடுகிறார்கள்.

வைப்பு நிதியைப் பெற வேண்டுமானால், வருங்கால வைப்பு நிதிக் கழகத்திடமிருந்து பார்ம் 19ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைக் கொடுத்தாகி விட்டது. சரி, அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை எப்படி அறிவது... அதற்கு இப்போது எளிதான வழி வந்து விட்டது. மீண்டும் மீண்டும் பிஎப் ஆபீஸுக்குப் போய் அலைவதை விட இருந்த இடத்திலேயே அதை அறிந்து கொள்ள இப்போது ஆன்லைன் டிராக்கிங் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

அதென்ன ஆன்லைன் வசதி?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கழகத்தின் இணையதளம் (www.epfindia.com) மூலம் இந்த டிராக்கிங்கை நாம் மேற்கொள்ள முடியும்.
இந்த இணையதளத்திற்குப் போய், அதில் நமக்கு எந்த சேவை தேவையோ அதை கிளிக் செய்தால், அதுதொடர்பான அத்தனை உதவிகளும் அங்கு காத்திருக்கிறது. உதாரணத்திற்கு, உங்களது வைப்பு நிதி விடுவிப்பு நிலவரம் withdrawal claim status என்ன என்பதை அறிய வேண்டுமானால், அதுதொடர்பான இணைப்பைக் கிளிக் செய்து உள்ளே போனால் விவரங்களை அறியலாம்.
அந்த இணைப்புப் பக்கத்தில், நாம் எந்த பிராந்தியத்தின் கீழ் வருகிறோமோ அந்த அலுவலகத்தை சொடுக்க வேண்டும். அதில் நமது இபிஎப் கணக்கு எண்ணைக் கொடுத்தால், உங்களது கணக்கின் நிலவரம் தெரிய வரும்.
அதேபோல உங்களது குறைகள், புகார்களையும் கூட ஆன்லைனிலேயே நாம் பதிவு செய்யலாம். நீண்ட காலமாக விண்ணப்பித்தும் பிஎப் பணம் வரவில்லை என்றால் இந்த குறை தீர்ப்புப் பகுதிக்குப் போய் விண்ணப்பிக்கலாம்.

செல்போனிலும் அலர்ட் பண்ணுவாங்க..
அதேபோல உங்களது இபிஎப் விண்ணப்பத்தில் உங்களது செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தால், செல்போன் மூலமும் அலர்ட்களை அனுப்புகிறது வைப்பு நிதி கழகம். உங்களது விண்ணப்பத்தைப் பெற்றவுடன் அதுதொடர்பான ஒரு எஸ்எம்எஸ் வந்து சேரும்.
நாடு முழுவதும் உள்ள 120 பிஎப் அலுவலகங்களில் தற்போது 118 அலுவலகங்கள் ஆன்லைன் செட்டில்மென்ட் வசதியுடன் கூடியதாக உள்ளன. இதனால் சேவை விரைவாகியுள்ளது, உறுப்பினர்களுக்கும் வேலை சுலபமாகியுள்ளது.