சென்னை : அரசின் இணையதள சேவைகளை அறிய, சேவை விளக்கக் கோப்பகம் என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு: அரசுத் துறைகள் பல சேவைகளை மக்களுக்கு இணையம் மூலம் வழங்கி வருகின்றன. இவை அனைத்தும் தற்போது, அந்தந்த துறைகளின் வலைதளங்களின் மூலம் அளிக்கப்படுகின்றன. பல சேவைகளின் இணையதள முகவரிகளை, பொதுமக்கள் நினைவில் வைத்துக் கொள்வது கடினம். இப்பிரச்னையைத் தீர்க்க, அரசின் அனைத்து சேவைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய சேவை விளக்க கோப்பகம் (online demonstrative services directory) ஒன்று, தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேரில் செல்ல வேண்டியதில்லை : இதில், அரசின் இணையதள சேவைகள், இணையதள முகவரிகள், சேவை தொடர்பான இணைப்புகள், உபயோகிப்போர் விளக்க வழிகாட்டி, சேவையின் நிலை ஆகிய விவரங்கள் இடம்பெறும். இதன் மூலம், பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெற, அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை குறையும்.

கண்காணிப்பு மென்பொருள் : அரசின் திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடைய, திட்டங்களின் செயல்பாட்டை காலமுறை அடிப்படையில் கண்காணித்து ஆய்வு செய்வது அவசியம். இதை கருத்தில் கொண்டு, ஒரு புதிய கண்காணிப்பு மென்பொருள் (scheme monitoring software) உருவாக்கப்படும். இதன் மூலம், திட்டங்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் எந்நேரமும் இணையம் மூலமாக கண்காணிக்கவும், அதன் அடிப்படையில் தக்க முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும்.

ஊடுருவிகள் : அரசின் செயல்பாடுகள் இணைய பொது தளங்களில் அளிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள அரசு இணைய தளங்கள் மற்றும் மென்பொருட்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பின், அதைப் பயன்படுத்தி இணைய வழி ஊடுருவிகள் (hackers), இணையதளங்களை உருக்குலைத்து முக்கிய தகவல்களை களவாடிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால், அரசு அளித்துவரும் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள, அரசுத் துறைகளின் இணைய தளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருட்களை, சம்பந்தப்பட்ட துறைகள் படிப்படியாக பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.