குடியிருப்பவர் அடையாள அட்டை !



 அடையாள அட்டை என்றால் என்ன ?

குடியிருப்பவர் அடையாள அட்டை தேசிய மக்கள் தொகையைப் பதிவேட்டிலிருந்து பெறப்படுகிறது. கடலோர கிராமங்களில் தொடக்கி உருவாக்கப்பட்டு வரும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நாட்டில் உள்ள அனைத்து வழக்கமாக வசிக்கும் நபர்களுக்கான ஒரு பதிவேடு ஆகும். இதில் ஒவ்வொரு வழக்கமாக வசிக்கும் நபருக்கும் ஒரு அடையாள எண் இருக்கும். இவ்வடையாள அட்டை, அடையாள எண்ணைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் தனிநபர் விவரங்களையும் கொண்டிருக்கும். நீங்கள் இந்தியாவில் வழக்கமாக வசிப்பவர்தான் என்ற அடையாள ஆவணத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த அடையாள அட்டையில் உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்கள் தந்தை / தாயாரின் பெயர், இனம், பிறந்த தேதி, பிறந்த ஊர், கைவிரல் ரேகைப் பதிவு மற்றும் அடையாள எண் ஆகியவை இருக்கும். இவ்விவரங்களை அடையாள அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும். அதே சமயத்தில் தனிநபர் விவரங்கள் மற்றும் விரல் ரேகைப் பதிவு விவரங்கள், அடையாள அட்டையில் உள்ள நுண் மின்னணு செல்லில் [ Microprocessor Chip ] பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்தியாவில் 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின்  70 மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வழக்கமாக வசிப்பவர் என்ற அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பதிவேட்டில் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கும் அடையாள எண் கொடுக்கப்படும். முதன் முதலில் இந்த அடையாள அட்டையைப் பெறுபவர்களாக நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்கிறீர்கள்.

 சரி என்னதான் பயன்கள் ?

1. உங்களுடைய அடையாளத்தை நிலைநாட்ட

2. உங்களுடைய குடியிருப்புத் தகுதியை நிலைநாட்ட

3. வயது மற்றும் பிறந்த தேதியை உறுதிசெய்ய [ இப்பதிவில் இணைக்கப்பட்ட அட்டையில் உள்ளவாறு ]

4. வங்கி கணக்கு, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம்/வாகனப்பதிவு, தொலைப்பேசி/கைபேசி. LPG கேஸ் இணைப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போதும், மேலும் திருமணப் பதிவு, நிலம்/சொத்து போன்றவை பதிவு செய்யும்போதும், இந்த அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிலைநாட்டுகிறது.

 பயன்படுத்தும் வழிமுறைகள் :

இந்த அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிருபிக்கும் முக்கியமான சான்றாவணம் ஆகும். உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கேட்கும் அலுவலங்கள் / நிறுவனங்களுக்கு இந்த அடையாள அட்டையைக் காட்டலாம். மத்திய / மாநில அரசு அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / வட்ட அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வங்கிகள், பாஸ்போர்ட் அலுவலகம், சேவை நிறுவனங்களான தொலைப்பேசி/கைபேசி நிறுவனங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் போன்றவற்றில் இந்த அடையாள அட்டை பயன்படும். அடையாள அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ள விவரங்களை பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் போன்ற விவரங்களைத் தவிர மின்னனு செல்லில் பதிவு செய்யப்பட்ட மற்ற விவரங்களை எங்கெல்லாம் [ Card Reader ] என்று சொல்லக்கூடிய படித்தறியும் கருவி இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்தக்கருவி மூலம் மின்னனு செல்லில் உள்ள விவரங்களை படித்தறிய முடியும்.

மின்னனு செல்லில் தற்போதைய / நிரந்தர முகவரி, திருமணநிலை, துணைவரின் பெயர் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இது உங்களுடைய அடையாளத்தை நிருபிக்கும் ஒரு சான்றாவணம் என்பதால் அரசு அல்லது காவல்துறை அல்லது பாதுகாப்புப்படை அதிகாரிகள் அடையாளம் பற்றிக் கேட்டால் நீங்கள் இதை அவர்களிடம் காண்பிக்கலாம். உங்கள் அடையாளம் பற்றிய கேள்வி விசாரணை முடிந்தபின் அடையாள அட்டையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மறந்து விடாதிர்கள். சில சூழ்நிலைகளில் அடையாள அட்டையை கொடுத்துவிட்டு செல்லவும் என்று கேட்டாலொழிய, மற்ற நேரங்களில் அட்டையை விட்டு விட்டு வராதிர்கள். இம்மாதிரி நேரங்களில் அடையாள அட்டையை ஒப்படைத்தற்கான அத்தாட்சியை சம்பந்தப்பட்ட அலுவலகம் /அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளவும்.

பாதுகாப்பது மற்றும் தொலைந்து போனால் புகார் செய்வது தொடர்பாக..
உங்களுடைய அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிருபிக்கும் விலைமதிப்பற்ற ஓர் ஆவணமாகும். ஆகையால் இதைப்பாதுகாப்பதும் பத்திரமாக வைத்திருப்பதும் உங்களுடைய கடமையாகும். வேறு எவரும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அடையாள மோசடி செய்தல் போன்றவற்றை தவிர்க்க இந்த அடையாள அட்டையை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அடையாள அட்டை சேதமடையாமல் இருக்க இதை நீர்/ நெருப்பு / மின்னனு சாதனங்கள் படாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லையெனில் மின்னனு செல்லில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் பாழாகிவிடும். செல்போனுடன் அடையாள அட்டையை ஒன்றாக வைக்காதீர்கள். இதை வளைக்கவோ மடிக்கவோ கூடாது. அப்படி செய்தால் அட்டையில் பதிக்கப்பட்டுள்ள மின்னனு செல் வெளியே வந்துவிடும். பின்பு அடையாள அட்டை பயனற்று விடும்.

 அடையாள அட்டையை பாதுகாப்பாக வைப்பதற்கும் அவசர சூழ்நிலையில் செய்ய வேண்டியதற்கும் சில வழிமுறைகள்...

1. உங்களுடைய அடையாள எண்ணை குறித்து வைத்துக்கொள்ளவும். அட்டை தொலைந்து விட்டாலோ களவு போய் விட்டாலோ மாற்று அட்டை பெற இது பயன்படும்.

2. உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினருடைய அடையாள அட்டை தொலைந்துவிட்டால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் மாற்று அட்டை பெற படிவம் R-1 இல்  விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்ப படிவத்துடன் காவல் நிலையத்தில் அட்டை தொலைந்ததற்கான கொடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை யையும் [ FIR ]  இணைக்க வேண்டும்.

3. உங்கள் அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ள தனிநபர் விவரங்களில் திருத்தமோ, மாற்றமோ செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் கிராம அதிகாரியையோ, தாலுகா அதிகாரியையொ கேட்டு உதவியைப் பெறலாம். அப்படி முடியாத பட்சத்தில் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரை மின் அஞ்சல் [ E-mail ] மூலமோ அல்லது கட்டனமில்லாத தொலைப்பேசி மூலமோ தொடர்பு கொண்டு உதவியைப்பெறலாம்.

4. அடையாள அட்டைதாரர் இறந்துவிட்டால் அவருடைய நெருங்கிய உறவினர்கள் இறந்த நபரின் அட்டையை குடியுரிமைத் தலைமைப் பதிவாளரிடமோ அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரியிடமோ நேரிடையாகவோ தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இயக்குனர்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம்,
E-பிரிவு, மூன்றாவது மாடி,
இராஜாஜிபவன், பெசன்ட்நகர்,
சென்னை-90 , தமிழ்நாடு
தொலைப்பேசி எண் : 044-24912993, 24911992

அல்லது

வட்டாட்சியர் அலுவலகம்
மாவட்டம்
தமிழ்நாடு

 புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்கவும், அட்டை வழங்குவதற்கான வழி முறை

முதன் முதலில் தகவல் சேகரித்த போது விடுபட்டுவிட்ட வழக்கமாக வசிப்பவர்களும், 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், தகவல் சேகரித்தபின் புதிதாகக் குடியேறியுள்ளவர்களும் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். இத்தகைய நபர்கள் தாலுகா பதிவாளரிடம் தங்களை சேர்க்குமாறு விண்ணப்பிக்கலாம்.

 தொடர்பு கொள்ள :

உங்களுக்கு அடையாள அட்டை பற்றிய தகவல்கள் அறிய விரும்பினாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள விரும்பினாலும் மாற்று அட்டை பெற விரும்பினாலும், அட்டை திருட்டு போய்விட்டாலும் அல்லது தொலைந்து போனாலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய, தேசிய அடையாள அட்டை சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்.

E-mail : nprcoastal.rgi@nic.in / npr.tn@nic.in
கட்டணமில்லாத் தொலைப்பேசி எண் : 1800110111
கீழ்க்கண்ட வலைத்தளத்திலும் விவரங்களை அறியலாம் :
www.censusindia.gov.in

Directorate of Census Operations ,
Chenai – 600090
Tamil Nadu
Tel : 044-24911992