தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’

கல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக  இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.
எனினும் ‘நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மக்கள்’ என்ற இலக்கை இந்தியா இன்னும் அடையவில்லை. மேலும் தொழிற்கல்வி பெற்றவர்களின் சதவீதமும் குறைவாகத்தான் உள்ளது. எனவே தான் ‘கற்கும் பாரதம்‘ திட்டம் தொடங்கப்பட்டது.
மக்கள் கல்வி நிறுவனம்
தொழிற்கல்வியை வழங்கிவரும் மக்கள் கல்வி நிறுவனம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.
இக்கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். மக்கள் கல்வி  நிறுவனத்தின் முக்கிய நோக்கமே தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு தொழிற்கல்வி அளித்து அவர்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு  அடையச் செய்வதுதான்.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நம் நாட்டில் 26 கோடி (15 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மக்கள்  கல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் பெண்களின் சதவீதம் மிகவும் அதிகம். எனவேதான், ‘கற்கும்பாரதம்‘ திட்டம் பெண்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் கல்வி கற்கும் வயதைத் தாண்டியோர் , கல்வி பயிலாத பெண்கள் ஆகியோருக்கு புதுமையான கல்வி அளிக்க ‘கற்கும் பாரதம்‘ திட்டம் வழிவகை செய்துள்ளது. கல்வி அறிவையும் எழுத் தறிவையும் வளர்ப்பது தான் இத்திட்டத்தின்  முக்கிய நோக்கம் என்பதை மேலேயே பார்த்தோம். அதே போல மக்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தொழிற்சார்ந்த கல்வி அளிப்பதாகும்.
தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொழிற்கல்வி பயில எவ்வளவு செலவாகும் என்பதை நாமறிவோம். வசதி உள்ளவர்களால் முறையாக பள்ளிக் கல்வி பயின்று நிறைய செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் பயில இயலும்.
ஆனால் பள்ளிக்கல்வியையே முறையாக முடிக்காத ஏழைகளால் செலவு செய்து எப்படி தொழிற்கல்வி பயில இயலும்? இவர்களுக்காக உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் மக்கள் கல்வி நிறுவனம்.  
இந்நிறுவனம் வழங்கும் தொழிற்கல்வியால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஏராளமான இளைஞர்களுக்கும், மகளிருக்கும் கைத்தொழில் முதல் கணிப்பொறிவரை பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்கியிருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு வேலைவாய்ப் பிற்கும் வழிகாட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: