டி ரைவிங் லைசென்ஸ் பெறுவது எவ்வாறு



டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிகவும் சிம்பிளான வேலைதான். ஆனால், அதை எப்படி பெறுவது என்ற நடைமுறைகளை தெரிந்து கொண்டு சென்றால் நிச்சயம் மிக எளிதான விஷயமாகவே அமையும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதை ஒரு பூதாகரமான விஷயமாக்கி ஏராளமான ஏமாற்று வித்தகர்கள் பணத்தை பறித்து விடுகின்றனர். இதனை தவிர்க்க சில வழிகாட்டு முறைகளை இங்கே வழங்குகிறோம்.



டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுனர் உரிமம் பெறுவதுதான். எல்எல்ஆர் எடுப்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம். எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 16 முதல் 18 வயதுடையோர் கியர் இல்லாத 50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மொபட் ஓட்டுவதற்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

18 வயதுக்கு மேற்பட்டோர் கியர் கொண்ட அனைத்து இருசக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதைத்தொடர்ந்து, 20 வயது பூர்த்தியடைந்தோர் கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க முடியும்.

சரி, முதலில் எல்எல்ஆர் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை பார்க்கலாம். எல்எல்ஆர் விண்ணப்பிக்க செல்லும்போது கீழ்க்கண்ட ஆவணங்களில் இருப்பிட மற்றும் வயதுச் சான்றுகளாக எடுத்துச் செல்வது அவசியம்.

இருப்பிட சான்றாக கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம்.

ரேஷன் கார்டு

பாஸ்போர்ட்

எல்ஐசி பாலிசி

வாக்காளர் அடையாள அட்டை

டெலிபோன் பில்

மின்கட்டண ரசீது

குடிநீர் கட்டண ரசீது

சாதிச் சான்று மற்றும் தாசில்தாரால் வழங்கப்பட்ட வருமானச் சான்று

அரசு ஊழியர்களின் வருமானச் சான்று

வயதை நிரூபிப்பதற்கான சான்றுகளாக கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்

பள்ளிச் சான்று

பிறப்பு சான்று

பான் கார்டு

சிவில் சர்ஜன் தகுதியுடைய டாக்டர்கள் வழங்கும் வயது சான்று

நீதிமன்றத்தால் வழங்கப்படும் வயது சான்று

இவற்றில் இரண்டு ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லுங்கள். அங்கு எல்எல்ஆருக்கு வழங்கப்படும் படிவம் 1 மற்றும் 2 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்களை இணைத்து 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை இணைத்து துணை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் அல்லது காருக்கு மட்டும் என்றால் ரூ.60 கட்டணமாகவும், இரண்டும் சேர்த்து எடுக்கும்போது ரூ.90 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

இதைத்தொடர்ந்து, விண்ணப்பதாரருக்கு தேர்வு நடத்தப்படும். எஸ்எஸ்எல்சி என்று கூறப்படும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு எழுத்து தேர்வும், பத்தாவது படிக்காதவர்களுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கும் தேர்வும் நடத்தப்படும்.

மோட்டார் வாகன சட்டத்தின் 118 பிரிவின்படி போக்குவரத்து விதிகள், சமிக்ஞைகள் மற்றும் இதர சாலை நடைமுறைகளை பற்றி விண்ணப்பதாரருக்கு தெரிகிறதா என்பதற்காகத்தான் இந்த தேர்வு. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அன்றைய தினமே எல்எல்ஆர் கைக்கு கிடைத்துவிடும். இது தற்காலிகமாக நீங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கிடைக்கும் லைசென்ஸ்தான்.

எல்எல்ஆர் பெற்று 30 நாட்களுக்கு பிறகு நிரந்தர லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், எல்எல்ஆர் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் இதை வைத்து நிரந்தர லைசென்ஸ் பெற முடியும். இந்த எல்எல்ஆர் காலாவதியானால் நீங்கள் புதிதாக எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான்.

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்:
எல்எல்ஆர் பெறுவதற்கு இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் இருக்கிறது. கீழ்க்கண்ட இணையதள முகவரியில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

http://transport.tn.nic.in/transport/appointment.do?_tq=f3e7c83b223cfeedbc12422fa73b307e

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் அப்பாயின்மென்ட் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த குறி்ப்பிட்ட தேதியில் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காட்ட வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால் அன்றைய தினமே எல்எல்ஆர் வழங்கப்பட்டு விடும்.